உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தனது பாவ கர்மாவிலிருந்து விடுதலைபெற சிறந்த உபாயம் சிவலிங்க பூஜை ஒன்றே. உலக உயிர்கள் மட்டுமல்லாது தேவாதி தேவர்களும் இந்த உபாயத்தைப் பின்பற்றிதான் தங்கள் பாவங்களிலிருந்து விமோசனம் பெற்றுள்ளனர். அப்படிப் பட்ட பாவ விமோசனத் தலமாகத் திகழ் கிறது தச்சூரில் அமைந்துள்ள பிச்சீஸ்வரர் ஆலயம்.
இந்த பூமியை அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களே அனைத்து நாகங்களுக்கும் ராஜாக்கள் ஆவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thaccur.jpg)
இந்த எட்டு நாகராஜாக்களும் வலிமை, தலைமைப் பதவி, தீர்க்காயுள் போன்ற வரங்கள்வேண்டி இப்பூலகில் பல்வேறு இடங்களில் சிவபூஜை செய்துள் ளனர். ஆனால் தனது இனத்தவர்கள் மனிதர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி, இத்தலத்தில் மட்டுமே இந்த எட்டு சர்ப்ப ராஜாக்களும் ஒன்றிணைந்து சிவலிங்க பூஜை புரிந்துள்ளனர். வாசனை மிகுந்த முல்லை வகையைச் சேர்ந்த பிச்சி மரங்கள் நிறைந்த பிச்சி வனத் தினிடையே, ஆதியில் சுயம்புவமாகத் தோன்றிய பிச்சீஸ்வரப் பெருமானை அனு தினமும் பிச்சி மலர்களால் ஆன்மபூஜை புரிந்தனர். மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள்முன் தோன்றி, சர்ப்பங்களின் அனேக பாவங்களையும் போக்கி, அவர்களுக்கென தனி உலகத்தையும் (நாகலோகம்) அருள்செய்தார். அதன் நன்றிக்கடனாக இன்றும் பல நாகங்கள் இங்கு உலவுவதைப் பலர் கண்டு பயபக்தியுடன் வணங்கியுள்ளனர். இன்றும் எட்டு நாகராஜர்கள் இங்கு பிச்சீஸ்வரரை வழிபடுவதாக நம்புகின்றனர் பக்தர்கள்.
எப்போதும் சிவனையே சிந்தித்துக் கொண்டிருக்கும் சித்த மகாபுருஷர்களுள் ஒருவரான அகப்பேய்ச் சித்தர் தினமும் அரூபமாய் இத்தலத்திற்கு வந்து அரவங்கள் வழிபட்ட பிச்சிவனநாதரை வழிபடுவதாக அகத்தியர் நாடி கூறுகிறது. அகப்பேய்ச் சித்தர் வழிபடும் சமயம் சில அபூர்வ நிகழ்வுகளும் இங்கு நடந்ததுண்டு. அவற்றை இந்த ஊர்மக்கள் கூறி சிலாகிக்கின்றனர்.
சோழர் காலத்திற்குமுன்பு இத்தல சிவலிங்கம் புற்றால் மூடியிருந்த தாகவும், அதைப் பெயர்க்கும்போது சிவலிங்கத்தின் முடியில் கடப்பாரை பட்டு ரத்தம் வழிந்ததாகவும், பின் ஈச்சங்கீற்றுகளைக்கொண்டு இடது தலைப்பகுதியில் தைத்ததாகவும் செவிவழிச் செய்தியொன்று கூறப்படுகிறது. இதனால் ஆதியில் இவ்வூர் தையலூர் என்றிருந்து, மருவி தற்போது தச்சூர் ஆனது என்றும் கூறுகின்றனர்.
முதலாம் பராந்தகச் சோழன் எழுப்பிய சிவாலயம் முற்றிலும் சிதைந்துபோக, பின்னர் தற்போதைய ஆலயம் எழுப்பப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர் ஊர்மக்கள். ஊரின் வடகிழக்கு திசையில் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. நான்கு பக்கமும் சுவர்கள் சூழ, தென்புறவாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். ராஜகோபுரம் காணப்படவில்லை.
உள்ளே, முதலில் நிருதி மூலையில் முழுமுதற் கடவுளின் சந்நிதி. அடுத்ததாக வள்ளி, தெய்வானையுடனான ஷண்முகர் சந்நிதி கொண்டுள்ளார். மேற்குப்புற மதிலையொட்டிய தாழ்வாரத்தில் வீரபத்திரர் எழில்வடிவாய் காட்சிதருகிறார். அருகில் சர்ப்பராஜர்கள் அருள்கின்றனர்.
மத்தியில் இறைவன் சந்நிதி அமைந் துள்ளது. அழகிய சிற்பங்களுடன் கூடிய 21 தூண்கள்கொண்ட பிரம்மாண்டமான முன்மண்டபம். அவற்றில் பல இடங்களில் சர்ப்பங்களும், அகப்பேய் சித்தர் வடிவமும் வடிக்கப்பட்டுள்ளன. பின்னர் ஸ்நபந மண்டபம். தொடர்ந்து அர்த்தமண்டபம் மற்றும் மூலஸ்தானம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thaccur1.jpg)
கருவறையுள் சதுர ஆவுடையார் நடுவே சுயம்புமூர்த்தமாக பேரருள் புரிகிறார் பிச்சீஸ்வரர். திருமுடியின் இடப்பக்கம் கடப்பாரையால் வெட்டுப்பட்ட தழும்பு பள்ளமாக உள்ளது. சீரற்ற சொரசொரப்பான லிங்கத் திருமேனி. அபூர்வமான லிங்கம். தினந்தோறும் அகப்பேய் சித்தர் வழிபடும் மூர்த்தி. அவ்வப்போது நாகங்களும் இவரைப் பூஜிக்கின்றன. கருவறையுள் அதீத காந்த அலைகள் இருப்பதை உணரமுடிகிறது.
உணர்ச்சிமிகுந்த லிங்க தரிசனம் முடித்து ஆலய வலம்வருகையில், ஈசனின் வாமபாகத்தில் தனியே சந்நிதிகொண்டு அருள்புரிகிறாள் அன்னை. முகப்பு மண்டபம் கடந்தால் அந்தராளம். இங்கே நின்றபடி அன்னை பிரஹன்நாயகியின் எழில்மிகு தரிசனத்தைக் கண்டு பரவசமடைகிறோம்.
ஆலய வலத்தை முடிக்கை யில் ஈசான திசையிலுள்ள நவகிரகங்களையும், கால பைரவரையும் வணங்கு கிறோம். பின் பலிபீடத்தின் முன்னே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி மகிழ்கிறோம்.
எல்லா சிவாலய விசேடங்களும் இங்கு நடத்தப்படுகின்றன. மாதப் பிரதோஷங்கள் மற்றும் பௌர்ணமி பூஜைகள் சிறப் புடன் அனுசரிக்கப்படுகின்றன. தல விருட்சமாக பிச்சி மரமும், தீர்த்தமாக கார்க்கோடக தீர்த்தமும் உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thaccur2.jpg)
சர்ப்ப சாபம், சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷத்தால் துன்பப்படுபவர்கள் இங்கு சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, நீலநிற பட்டாடை அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சித்து, பால் பாயசமும், அக்காரவடிசலும் நிவேதித்து வழிபட, சிறந்த பலன்களைப் பெற்றிடலாம்.
தினமும் ஒருகால பூஜை நடைபெறுகிறது. ஊரார் உதவியுடன் பகல் பொழுதில் எப்போது வேண்டுமானா லும் இங்கு ஆலய தரிசனம் செய்யலாம்.
எல்லாம்வல்ல பிரஹன்நாயகி அம்பாள் உடனுறை பிச்சீஸ்வரரை வழிபட்டு சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில், பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/thaccur-t.jpg)